Saturday, July 18, 2009

ருத்ர தாண்டவம்

ரொம்ப வருடங்களுக்கு முன்னால் டாக்டர் ருத்ரனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்போது அவர் மருத்துவராக பணியாற்றிக் கொண்டே மனநல மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார் ( நீ ஏன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டரைப் பார்க்கப் போனாய் என்று கேட்காமல் இருக்க இந்த டிஸ்கி ).
ஏதோ விஷயமாய் அவரைப் பார்க்கப் போன ஏன் நண்பரோடு வேலை வெட்டி இல்லாமல் இருந்த நானும் சேர்ந்து கொண்டேன். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருந்து வடக்கு உஸ்மான் ரோடில் திரும்பும் வளைவில் அவரது க்ளினிக் இருந்தது. இரவு ஒன்பது மணிக்கு க்ளினிக் மூடும் சமயமாகப் போனால் பார்த்துப் பேச சரியாக இருக்கும் என்பது நண்பரின் யூகம். அங்கே போனால் அதுதான் பீக் அவர் போல சரியான கூட்டம். பெஞ்சுகளில் வழிந்து நிரம்பிய ஏழை நோயாளிகள். அவர் பணி முடியும் வரை அவரது அறையிலேயே காத்திருந்தோம். திறந்திருந்த அடுத்த அறைக் கதவு வழியே அழகிய வீணை, ஓவியங்கள்.
சுரமும் இருமலும் என்று பலருக்கு வரிசையாய் மருத்துவம் பார்த்துக் கொண்டே இருந்தார் ருத்ரன். நடுவே ரொம்பவும் சோர்வாக வந்த சிலரிடம் சிம்டம்ஸ் கேட்டு விட்டு " காதிலே யாரவது பேசுற மாதிரி இருக்குதா ? " உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியத்தோடு ஆமாம் போட்டவர்கள் பலர். இதுதான் மன நோய்க்கான அறிகுறி . இப்போது சரி செய்யாமல் பேய் பிடிப்பது ஓட்டுவது என்று முத்த வைத்து கடைசியில் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்கிறார்கள் .
பூசாரிகளுக்கு காசு என்று வருத்தப் பட்டுக் கொண்டார். வந்தவர்கள் அனைவரும் ஏழைகள். சில பேர் காசில்லாமல் தயங்கினார்கள். பல பேர் அவர்களால் முடிந்ததை கசங்கிய நோட்டுக்களாகவும் காசுகளாகவும் மேசைமேல் வைத்து சென்றார்கள். வினோதமாகப் பார்த்த என்னைப பார்த்து சிரித்துக் கொண்டே " போன வாரம் வருமான வரி ஆய்வாளர் வாரம் மாறு வேஷத்தில் ஆய்வு பண்ணி இவ்வளவு கூட்டம் என்றால் இவ்வளவு வருமானம் வரணுமே என்று கேட்டார் . பக்கத்துலயே உக்காந்து எண்ணிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன் . மொத்தம் அறுபத்து ஐந்து ருபாய் சில்லறையை எண்ணி வைத்துவிட்டு கும்பிட்டு விட்டுப் போனார் " என்று சொன்னவரைப் பற்றிய பெரும் அபிப்பிராயம் மனதில் வந்தது.
அவரது பதிவுகளைப் பார்க்கும்போது மன நல மருத்துவராக இல்லாமல் ஒரு சராசரி பதிவராக சர்ச்சைகளில் முகமூடிக் கும்பல்களின் வாயில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு இருப்பது ஒரு வித பிம்ப உடைப்பாக இருக்கிறது. பயித்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வயித்தியருக்கு பைத்தியம் பிடிச்சா..

Sunday, June 28, 2009

மெத்தப் படித்தவர்கள்

ஆப்பிரிக்கா, லத்தின் அமேரிக்கா, ஐரோப்பா என்று உலக எழுத்தக்களை சிலாகித்து " நேக்கு இதெல்லாம் தெரியும் .. நோக்கு என்ன தெரியும் " என்ற ரேஞ்சில் உசுப்பேத்திக் கொண்டிருப்பவர்களையும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று புரியாத மொழிக் கதைகளைப் படித்து தலை முடி பிய்த்துக் கொள்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இதில் ஒருவர் சினிமா விமரிசனம் எழுத பலமுறை அதே படத்தைப் பார்க்கிறாராம், ஒருமுறை பார்க்கும் போதே மனதில் ஒட்ட வில்லைஎன்றால் அந்தப்படத்துக்கு விமரிசனம் எதற்கு?

Saturday, June 13, 2009

மனவெளியில்

மனவெளியில்
நடந்து போகும்
பாதை எங்கும் இருட்டு .....
யாரும் நடக்காத பாதையைத்
தேடி அலைகிறேன்...
புதிதாக நடப்பதற்கு
புதிதாக சொல்வதற்கு
புதிதாக எழுதுவதற்கு
தேடி அலைகிறேன்.......
அலைந்து களைத்த போதில்
மனம் சொல்லிப் போனது
உணர்தல் மட்டுமே புதியது..........


t

உங்களுக்கு என்று ஒரு கருத்து .........

தனக்கென்று ஒரு கருத்தும் இல்லாமல் அடுத்தவர் கருத்தைச் சுமக்கின்றவர்கள்..... உனக்குத் தெரிந்ததைவிட எனக்குத் தெரிந்த எழுத்தாளருக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அடுத்தவர் சொம்பு தூக்குபவர்கள்..... இவர்கள் ப்லோக் எழுதி யாருக்கு லாபம்.. எங்கேயோ எப்போதொ படித்த அரைகுறை வாசிப்புகள் .. உங்களுக்கு ஒருத்தரைப் பிடித்தால் கொண்டாடுங்கள், பாராட்டுங்கள் - ஆனால் தனிப்பட்ட முறையில் கண்ணியமில்லாமல் அடுத்தவர் பற்றியோ அவரை அவதூறு செய்யும் விமரிசனங்களுக்கு ஆமாம் போட்டோ உங்களது தனிப்பட்ட எண்ணங்களுக்கு சேறு பூசிக் கொள்ளாதீர்கள்.....






Friday, May 29, 2009

ஸ்டாலின் துணை

சோ வைப் பிடிக்காதவர்கள் கூட அவர்களது வாதத்துக்கு இழுப்பது " சோ வே சொல்லிட்டாருல்லே ஸ்டாலினுக்கு அரசியல் தகுதி இருக்குன்னு.." தகுதியின் அடிப்படையில் இந்திய வம்சாவளி சட்டத்தின் கீழ் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவிதான் பொருத்தம். விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள். இப்போது அமைதியின் உருவமாய் அன்பின் இருப்பிடமாய் அருள் பாலிக்கும் ஸ்டாலினுக்கும் தொலைகாட்சி செய்தி வாசிப்பவருக்கும் பற்றிய தொடர்பு பற்றி இணையத்தில் ஆச்சரியக் கேள்வியோடு lukki லுக் எழுதியிருக்கிறார் ,, ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல ..... பத்திரிகை நண்பர்களைக் கேளுங்கள். தமிழ்ர்களுக்கு தலைவிதி இப்படியென்றால் யார் தான் என்ன செய்வது . ஆனாலும் விஜயகாந்துக்கு இவர் ரொம்பவே தேவலை.

Thursday, May 28, 2009

ஊருக்கு இளைத்தவர் இளையராஜா

இணையத்தில் வலைப்பதிவர்களின் வாயில் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும் இளையராஜாவைப் பார்க்கும்போது பரிதாபமாய் இருக்கிறது. அவர் தனக்கென்று ப்ளாக் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. தனக்குத்தான் ஆஸ்கார் தரவேண்டும் என்று தம்பட்டம் அடித்ததுமில்லை. உலக இசை பற்றி பத்தி எழுதியதில்லை. "இசை என்பதே ஒரு ஏமாற்று வேலை " இதில் என்ன சாதனை என்று புகழை ஒதுக்கி ஆரவாரமில்லாமல் இருப்பவரைப் பற்றி சர்ச்சை கிளப்புவது - சாரி ரொம்ப ஓவர்

Tuesday, May 19, 2009

தனி நபர் தாங்குதல்

நமக்கு ஒருவரைப் பிடித்துப் போனால் அவரைத் தாங்குவதும் ரசிகர் மன்ற ரேஞ்சுக்கு உயர்த்துவதுமான குழு மனப்பாண்மையில் இயங்கிவரும் வலைப் பதிவு உலகம் என்னை மிரள வைக்கிறது. சாதி, நடிகன், இசையமைப்பாளன், எழுத்தாளன், கட்சி என கோஷ்டி கட்டிக் கொண்டு அடித்துப் புரளும் இவர்களது அடிப்படை ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை. தனது குடும்பம் உறவு சுற்றம் தெரு சமூகம் எதிலும் அக்கறை குறைந்த இவர்களுக்கு அந்நிய நாட்டுப் பிரச்சினை பற்றி அடித்துக் கொள்வார்கள். மட்டமான கதைகளையும் பாலுணர்வு தூண்டும் பாம்புக் கதைகளையும் எழுதிக் குவித்துவிட்டு ஸமூக அக்கறையோடு குட் டச் பேட் டச் பற்றி கலந்துரையாடுகிறார்கள்.

Monday, May 18, 2009

முடிந்ததா?

இன்னும் ஒரு வாரத்துக்கு ஈரமும் வீரமும் என்று பலகோடி கவிஞர்கள் கவிதை மழையாய்ப் பொழிவார்கள். அரசியல்வாதிகள் இரங்கல் கூட்டம் போடுவார்கள். சினிமா டைரக்டர்கள் புது படத்துக்கு கதை தயாரிப்பார்கள். அகதியாய் வந்த மக்கள் ஊர் போய்ச் சேர்ந்து வருடத்துக்கு ஒருமுறை மாவீரன் தினம் கொண்டாடுவார்கள். வன்முறைக்கு எதிராக வன்முறை வெல்வது சினிமாவில் மாத்திரமே. அஹிம்சை வழியாக வெற்றி பெறுவது காந்திக்கு அப்புறம் கனவில் மாத்திரமே.

Sunday, May 17, 2009

உத்தமத் தமிழ் எழுத்தாளர்களில் முதலில் கண்ணுக்குப் படுவது சாரு நிவேதிதா. ஏழு எட்டு ஆண்டுகளாக இணையத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பிரகிருதி. மெகா சீரியல் எழுதுபவர்களையும் மிஞ்சும் ஒரு வஸீகர படைப்பாளி. எதை எழுதினாலும் சொந்தக் கதை மாதிரியே பில்ட் அப் செய்வதால் ( பழைய கதை எல்லாம் உண்மைக்கதை என்று அவரே சொல்வதால் ) அக்கப்போர் வாசகர்களுக்கு நல்ல தீனீ. மனிதன் நல்ல உழைப்பாளி. தமிழ் டிவி பார்ப்பதேயில்லை என்று சொல்லிவிட்டு யு டியுப் பார்த்து உலக அறிவை வளர்த்துக் கொண்டு மற்றவர்களுக்கும் அதை வழங்கும் வள்ளல். எதிர்மறை வாதம் செய்தால் கவனம் ஈர்க்கலாம் (பெரியார் வழி ) என்று இவர் போட்டுத் தாக்குவது பிரபலங்களை. நோபல் பரிசு தனக்குத்தான் என்று இவர் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்ட சக ஜோல்னாப் பை , பல்லை உடைக்க முயன்ற கதை அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த காலத்தில் தானொரு பிக்பாக்கெட் என்று இவரே அடிக்கடி சொல்லிக் கொள்வார். ஒரு சிலர் இவர் கதைகளையும் திருடியிருப்பதாக புரளி கிளப்பிய காலமும் உண்டு. சுஜாதா இறக்கும் வரை அவரைத் திட்டிவிட்டு பின்பு அவரைப் புகழ்ந்தது தள்ளியது இணையம் முழுக்க niரைந்து கிடக்கும் அவரது ரசிகர்களைக் கவரும் உக்திதானே
சினிமா இசை என்று பல்துறை வித்தகராக தன்னைக் காட்டிக் கொள்ளும் இவரது எழுத்துக்களில் ஒரு மிகைப்பட்ட அரை வேக்காட்டுத்தனம் தெரிவதை உணரலாம்.
வெகு ஜனப் பத்திரிக்கைகள் இவருக்கு சில காலம் வாழ்வு கொடுத்துப் பின் அதைப் பிடுங்கிக் கொண்டதில் வருத்தமே. மலையாள எழுத்தாளர்கள் மானாட மயிலாடப் பார்த்துக் குட்டிச் சுவராய்ப் போனதால் அங்கே பத்தி எழுதக் கூட ஆளில்லாமல் போய்விட்டது அதிர்ஷ்ட்டமே. மனுஷ்ய புத்திரன் இவரை மோடி மஸ்தான் எனக் குறிப்பிட்டிருக்கிறார். பாம்பு கீரி கதைகள் பல சொல்லும் இவர் ஒரு மோடி மஸ்தானைப் போல அடிக்கடி பணம் போடச் சொல்லி கேட்டுக் கொள்வார். இப்போதெல்லாம் நிஜ மோடி மஸ்தானைப் போல தனக்கு எதிர் மறையாக யார் நடந்தாலும் கெட்டது நடக்கும் என்று உடுக்கு அடிக்க ஆரம்பித்திருக்கிறார். தேர்தலுக்கு இவர் அடித்த குடுகுடுப்பை பலிக்காமல் போனது துரதிர்ஷ்டமே. அரைத்த மாவையே அரைக்காமல் நல்ல கதைகள் எழுதி சிறக்க வாழ்த்துக்கள்.